Friday 23 September 2016

அதிர்ஷ்டகார பிணம்

அங்கே மர்மமான முறையில் இறந்த ஒரு பிணம் நடு வீதியில் கிடத்த பட்டு இருந்தது .

விஷயம்  தெரிந்து ஒரு மஞ்சள் கொடி கூட்டம் அங்கே வந்து  சேர்ந்தது .

சில முக்கிய விசாரனை கேள்விகள் கேட்டது .

" பிணம்  என்ன சாதி ? " 

மஞ்சள் கொடியை சார்ந்த எந்த சாதியும் இல்லை.

தங்கள் சாதி  என்றால் பிணத்திற்கு மாலையிட்டு அவர்களெல்லாம் பிணம் போல் சாலையில் படுத்து கொண்டு, அந்த பிணத்தை கொன்றவனை உடனே பிடிக்க வேண்டும் என்று, ஒரு நவீன மறியல் செய்யலாம் என்று ஆர்வமாக  வந்த கும்பலுக்கு ஏமாற்றமாய் போனது.

ஒரு பின் யோசனையாக " கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்க படுகின்றவன் என்ன சாதி?  "

அதுவும் ஒரு மஞ்சலற்ற சாதி .

அவன் மஞ்சள் சாதியாய் இருந்தால் அவனுக்கு முன்ஜாமீன் எடுத்து விட்டு பிணத்தை பற்றி  சில  அவதூறுகளை மஞ்சள்  நிற  நிருபன் மூலம் புலன் விசாரனை என்ற பெயரில் வெளியிடப்படும் மஞ்சள் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பாக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை .

மிகவும் நொந்து கொண்டு வேறு எதுவும் மஞ்சள் கொடிக்கு ஏதுவான பிணம் கிடைக்குமா என்று மோப்பம் பிடித்து கொண்டே சென்றது அந்த கூட்டம் .

பிறகு ஒரு கறுப்பு கொடி கூட்டம் . அதே கேள்விகள் .  பிணத்திற்கும் கொன்றவனாக கூடியவனுக்கும் கறுப்பு கொடிக்கும் சம்பதமில்லை என்றவுடம் மிகவும் கடுப்பாகி போனது அந்த கூட்டம் .

எந்த  பயன்பாடும் இல்லாத பிணங்கள் எதற்குதான்  விழுகின்றன  என்று முனகி  கொண்டே சென்றது  அந்த கூட்டம் .

மூச்சற்ற பிணம் ஒரு  நிம்மதி பெருமூச்சை விட்டது . அந்த நிம்மதியின் அர்த்தம் புரிய  அந்த பிணம் உயிரோடு இருந்த பொழுது நடந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது .

சில வருடங்களுக்கு முன்பு மஞ்சளும் கறுப்பும் அடித்து கொண்டு பெரும் கலவரம் . சாதியை ஒட்டிய கலவரம் என்பதால் ஓட்டிழக்க மணமில்லாமல் ஆளும்  உட்பட எந்த கட்சியும்  அந்த கலவரத்தை கண்டு கொள்ளவில்லை.

மேல் உத்தரவில்லாத காவல் கட்டணமில்லா வன்முறை காட்சிகள் கொண்ட அதிரடி திரைப்படமாக அந்த கலவரத்தை கற்பனை செய்து கொண்டு தன்னை பார்வையாளனாக பாவித்து கொண்டது .

தானாக முன் வந்து கலவரத்தை கட்டுபடுத்த முற்பட்டோரில் ஒருவரான அந்த பிணத்தின் அப்பாவின் உச்சந்தலையை  ஒரு 'கறுப்பு'  கட்டை பதம் பார்த்ததில்  அவர் உயிர் நீத்தார். தன் பங்கிற்கு 'மஞ்சள்'   அவர் வீட்டை தீயிட்டது. 

அந்த சமயத்தில்  வரப்பில் இருத்ததால் மொத்த குடும்பத்தில் மிச்சபட்ட உயிராய் இருந்தது அந்த பிணம். 

கருமாதிகள் முடிந்து வேறு மாநிலம் சென்று பிழைப்பை நடத்தலாம் என்று யோசனையில் நடந்து கொண்டிருந்த பொழுதுதான் அந்த துர் சம்பவம் நிகழ்ந்தது .

தொலைக்காட்சி பெட்டி விற்பனை செய்யும் கடைவாசலில் இருந்த பெட்டியொன்றில்  ஓடிக்கொண்டிருந்த  

அந்த நாட்டின் 'அமைதி பூங்கா' என்ற பட்டம் பிணத்தின் மாநிலத்திற்கு வழங்கப்படும் விழாவான அந்த நிகழ்ச்சி. 

பார்த்த  நொடியில் பிணத்தின் புத்தி பேதலித்து விட்டது. தீவிர  மனபிறழ்வு நோயில் ஊர் ஊராய் சுற்றி திரிந்து 'அமைதி  பூங்கா'  எங்கேயும் இருக்கிறதா  என்று தேடி அலைந்தது.

ப்ச்.  அப்படி   ஒன்றும் இல்லை .

பிறகு  அதுவே ஒரு அமைதி  பூங்காவை கற்பனை செய்து கொண்டது . மஞ்சள் மற்றும் கறுப்பு பூக்கள் இல்லாத ஒரு அமைதி பூங்கா . 

 

அந்த   அமைதி  பூங்காவில் கை விரித்து  அங்கும் இங்கும் கானம் பாடி சிரித்து திரியும்  பொழுது ஊர் அதை தனக்கு தானே பேசி  சிரிக்கும் பைத்தியம் என்று நினைத்து கெnண்டது.

யார் மீதும் கல் எறியாயததால் அதை மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணம் யாருக்கும் வரவில்லை .

பசியின் உச்சத்தில் அந்த அமைதி பூங்காவில் இருந்து வெளியே வந்து இத்த உலகில் பிச்சை கேட்கும் .

இரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது கிடைத்து விடும் .

அன்று அதுவும் இல்லை என்று ஆன பொழுது அங்கே லுங்கி மடித்து நடந்து வந்த  அவனின் கையிலிருந்த அந்த பொட்டலத்தை பிடுங்கியது .

அவன் கையிலிருந்தது ஒரு பொக்கிஷம் என்று அதற்கு தெரிய வில்லை . அவன் அடிக்க இருக்கும் சரக்கு  சைடில் இருக்க வேண்டிய நொறுக்கு  தீனிகள்  அவை.

பொங்கி  வந்த கோபத்தில் பிணத்தின் விலாவை தன் முஷ்டியால் நொறுக்கிகினான். நுரையீரல் பொத்தல் விட்டு மூச்சிரைத்து கடைசியாக அந்த பிணம் ஒரு முறை இறந்தது. 

செத்த பிறகு கலவரத்தை தூண்டாத ஒரு  சாதியற்ற அநாதை பிணமான அதிர்ஷ்டத்தை நினைத்த பொழுது அந்த பிணம் மாயை அற்ற ஒரு நிஜ அமைதி பூங்காவினுல்  நுழைந்து கொண்டிருந்தது .

Sunday 31 July 2016

நஷ்டத்தின் மானம்

ஒரே நகையாய் இருந்தது குனி முத்துவிற்கு .

( கட்டை விரலில் பட்டை அடித்து கொண்டு மிரட்டும் அவன் தலைவனின் படம் தங்கி கொண்ட தங்க மோதிரத்தை  ஒத்த , அவன்  மொத்த உடம்பையும் உறுத்தி கொன்டிருந்த  நகைகளை சொல்ல வில்லை )

 நீதிமன்ற கூண்டில்  நிற்க வைக்கப்பட்டிற்கும் அப்புவை பார்த்து தான் .

ஊரே பற்றி எரியும் பொழுது , அவசர அவசரமாய் தலைவனின் படத்தை  தீ அணைப்பு வண்டியில் தீட்டி எடுத்து  வருவதற்குள் தீவட்டி அப்பு தன் சொந்த செலவில் தண்ணி டாங்குகளை கொண்டு வந்து அனைத்து விட்டு இருந்தான்.

தலைவனிடம் நல்ல வசை குனிமுத்து விற்கு. இன்னொரு  எம்.எல்.ஏ அடி சரணம் உதவிக்கு  வரும் ஹெலிகாப்டரிலயே தலைவனின் படத்தை வரைத்து வைத்திருக்கிறானாம். தயார் நிலையில் இல்லாத  குனிமுத்துவிற்கு வருவாய் இல்லா குடி( சை)பாக்கம்  தொகுதி ஒதுக்கப்பட்டது அடுத்த தேர்தலில் .

அப்பு அவனிமிருந்து பறிக்கப்பட்ட தொகுதியில் நின்று வென்று விட்டான் .

முதல் நாள் சட்ட சபைக்கு   அப்பு நுழையும் பொழுது தடுத்தவாறு குறுக்கே நின்றான் குனி முத்து

" கொஞ்சம் வழியை விடுங்கள் " என்றான்  அப்பு .

" முடியாது "  என்றான் விராப்புடன்  குனிமுத்து .

" தயவு செய்து வழியை விடுங்கள் " அப்பு.

" முடித்தால் தள்ளி விட்டு செல் " என்றபடி எதாவது அவன் வம்படி செய்தால் எப்படி நயமாக கூப்பாடு போட்டு தன் அட்களை வரவழைத்து அவனை நய்ய புடைப்பது என்ற பகல் கனவில் ஆழ்ந்தான்.

 அப்பு அமைதியாக சென்றதில் பெரும்  ஏம்மாற்ற வெள்ளத்தில் முழ்கி கொண்டிருந்த மனதிற்கு தலைவன் படம் பெயின்ட் அடித்த தோனியாய் வந்தது அந்த யோசனை .

" மான  நஷ்ட வழக்கு "

நீதிபதி குமரேசன் தான் . அவர் பணி ரெண்டாவதில் கணக்கில் ஃபெயில் லான பொழுது குனிமுத்துவின் அப்பா தான் கொஞ்சம் குடுத்துது பாஸ்  வாங்கி குடுத்து பி.எல் லிலும் சேர்த்து விட்டார். ( தன் பையனுக்கு பின்னாடி முன் ஜாமின்  எடுக்க பயனாய் இருக்கும் என்று )

அதுதான்  அப்படி  ஒரு  நகை .

" அப்பு. கொஞ்சம் வழியை விடுங்கள் என்று என் கட்சி காரரை பார்த்து சொல்லி இருக்குறீர்கள் " என்ற குனி முத்துவின் வக்கீல் உண்மையிலேயே அவர் கட்சிகாரர்தான்

" கொஞ்சம் " " நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர் " " கொஞ்சம் வழியை விடுங்கள். . வழியை விடுங்கள் என்று சொல்லியிருக்கலாம் . ஆனால்  கொஞ்சம் என்று  ஏன் கூறினார். குனிமுத்து குண்டானவர் . அவர் வழி விட்டால் கொஞ்சம் தான் இடம்  கிடைக்கும் என்ற  அர்த்தத்தில் என் கட்சிகாரரின் மானத்தை  அனைத்து கட்சியினரும் இருக்கும் சட்டசபையின் வாசலில் வைத்து வாங்கி இருக்கிறார் இந்த  அப்பு "

நல்ல வேளை நீதி தேவதையின் கண்ணோடு காதையும் சேர்த்து கட்டி யிருந்ததால் தப்பினாள்.

" அதோடு  நிறுத்தி இருக்கலாம் . ஆனால்  அப்பு ஒரு படி மேலே போய் தயவு செய்து வழியை விடுங்கள் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் குனிமுத்து தயவே இல்லாத  ஒரு கல்  நெஞ்ச குரூர கருணையே இல்லாத தாளி அறுக்கும்  காளிப்பயல் என்ற அர்த்தத்தில் என் கட்சிகாரரின் நெஞ்சத்தை புல்லட்  போல் தாக்கி புண்ணாக்கி இருக்கிறது  அந்த ஈனமான வார்த்தை "

" கொஞ்சம் மற்றும் தயவு செய்து ஆகிய கொடும் வார்த்தைகளை பயன் படுத்திய அப்பு தான் செய்தது தப்பு என்று உணரும் வகையில்  வார்த்தை ஒன்றிருக்கு  ஒராண்டாக மொத்தம் மூன்றாறாண்டுகள் ( இவரும் கணக்கில் வீக்கு ) தண்டனையை குடுத்து  கொஞ்சம் தயவு செய்ய வேண்டும்  யுவர் ஆனர் . "

 அப்பு  வக்கீல்  எடக்கான் எழுந்தார்.

" ஒரு  நூறு ருபாய் பையிலிருந்து  களவாட பட்டால் பையின் சொந்த காரரிற்கு  நூறு ருபாய்  நஷ்டம். ஆனால் அவர் வழக்கு தொடுப்பதற்கு முன் தன் பையில் நூறு ரூபாய் இருந்ததற்கு ஆதாரம் தர வேண்டும் "

அர்த்தம் புரியாமல் புருவத்தை உயர்த்தினார்   நீதிபதி .

" இல்லாத பணம் களவாடபட்டு நஷ்டம் ஆகாது "

" மான நஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்கள் . குனிமுத்து விற்கு மானம் இருந்தது  என்பதற்கு என்ன ஆதாரம் ? "

கண்ணை கட்டியிருந்த துணி சற்று தளற நீதி தேவதை காதை கொஞ்சம் வெளியே  நீட்டியது.

Sunday 8 September 2013

தாலாட்டு பாடிய ஊமை

பிரபலமான அந்த தொலைக்காட்சி தொகுபாளினியிடம் விமான நிலையத்தில் காத்திருக்கும் பொழுது பேசும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு.

நான் எழுத்தாளன் என்று அறிமுகபடுத்தி கொண்டவுடன் "என் கதையை எழுதுவீர்களா ?" என்றாள். ( அவனை அவள் என்றும் அவளை அவன் என்றும் சொல்ல முடியாது எனினும் கதை சொல்லும் வசதிக்காக 'அவள்' என்றே சொல்கிறேன் )

" சொல்லுங்கள்" என்றேன் ஆர்வமாய் .

" அந்த ஊர் மக்கள் அந்த குப்பை தொட்டியை தெய்வ தொட்டில் என்றே அழைத்தனர் "  என்று கதையை ஆரம்பித்தாள்.

" வேண்டாத குழந்தைகளை கடவுளை வேண்டி கொண்டு அந்த கோவில் முன் உள்ள அந்த தொட்டிலில் இரவோடு இரவாக போட்டு விடலாம் "

" காலையில் கோவிலுக்கு வருகிற கூட்டம் சாமியை பார்ப்பதற்கு முன் அந்த தொட்டிலையே ஆர்வத்தோடு பார்க்கும். குழந்தை இருந்தால் அதன் முகத்தை பார்ப்பதற்க்கு முன் அதன் பாலின குறியை பார்ப்பதிலேயே குறியாய் இருக்கும் அந்த கூட்டம்"

" ஆண் குழந்தை என்றால் ஏலத்திர்கும் பெண் குழந்தை என்றால் அநாதை ஆசிரமத்திர்க்கும் கொடுத்து விடும் அம்பாளுக்கு விஷேஷமான அந்த கோவிலின் நிர்வாகம் "   

" அந்த தொட்டிலில் ஆணுமில்லாத பெண்ணுமில்லாத  நான் குழந்தையாய் விழுந்த பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை அந்த நிர்வாகத்திர்கு "

" பேசாம ஊருக்கு வெளிய இருக்கும் அந்த 'கெட்ட வார்த்தை' வீட்டில் இதை சேர்த்து விடலாம் . அப்படியே இந்த தீட்டை கழிக்க ஊரில் வசூல் செய்து ஒரு பெரிய பூஜை பண்ணிவிடுவோம் என்று சொன்னார் கோவில் குருக்கள் "

"ஒவ்வொரு கெட்ட வார்தைக்கும் அது கெட்ட ஒரு வரலாறு உண்டு" .

"முன்பு ஒரு காலத்தில் கோவிலில் வழிபடக்கூடிய தேவர்களின் சிலைகளின் திருவடியை தன் கை கொண்டு கழுவும் புனிதர்களாய் சில பெண்கள் இருந்தனர். 'தேவர் திருவடியார்கள்' என்று மரியாதையோடு அழைக்க பட்டனர்" .

"கொஞ்சம் கொஞ்சமாக கோவிலின் அதிகாரத்தில் இருக்கும் பெரியவர்கள் அந்த பெண்களை கட்டாயபடுத்தி தங்களின் பணியாட்களாக மாற்றி கொண்டனர் . கோவிலில் பூஜை செய்வது போயி இவர்களுக்காக ஆடியும் பாடியும் மற்றும் இன்ன பிறவும் செய்து பிழைக்க வேண்டியது ஆயிற்று அந்த பெண்களுக்கு .  'தேவர் திருவடியார்கள்' 'தேவடியர்' ஆனார்கள்".

"மற்ற ஆண்களும் அவர்களை இரையாக்க  'தேவடியர்', 'யர்' போயி 'யா' வாகி , அவர்களை ஊரை விட்டு விலக்கி வைத்து அவர்கள் பெயரையே கெட்ட வார்த்தை ஆக்கி விட்டிருந்தது அந்த ஊர்"   .

" குருக்கள் சொல்லி முடிப்பதற்கு முன் அந்த கோவிலில் வேலை செய்த அந்த ஊமச்சி என்னை மார்போடு எடுத்து அனைத்து கொண்டாள் "

" தான் அந்த குழந்தையை வளர்க்க போவதாக சைகை செய்தாள். கோவில் ஆட்கள் பிடுங்க முயிற்சித்த பொழுது என்னை விடாமல் இறுக்கி பிடித்து கொண்டாள் . கோவில் வேலையிலிருந்தே அவளை விரட்டி விட்டனர் ."

" ஊருக்கு வெளியே குடிசை போட்டு என்னை வளர்த்தாள். கோவிலால் விரட்ட பட்டவள் என்றாலும் குறைந்த சம்பள வேலைக்காரி என்பதால் பெரிய மனசு பண்ணி அவளை வேலையில் வைத்து கொண்டனர் சிலர்"        

" அப்பொழுதே அந்த அதிசயம் நடந்தது "

" இந்த ஊர் கோவிலுக்கு வந்து சேர்ந்து ஐந்து வருடம் ஆகிறது அந்த ஊமச்சிக்கு. வாயை திறந்து ஒரு சப்தம் எழுப்பியது கிடையாது அவள். பாம்பு கடித்து துடிக்கும் பொழுது கூட சிறு சப்தம் கூட எழுபாததை கண்டு அந்த ஊர் மருத்துவரே ஆச்சரிய பட்டார் "

"  அப்படி பட்டவள் , என்னை தூக்கிக்கொண்டு சென்ற சில தினத்திலேயே எனக்கு தாலாட்டு பாட ஆரம்பித்து விட்டாள் "

" அந்த ஊர் ஸ்தம்பித்து போனது . அவளின் குரல் தெய்வீகமாக இருப்பதாக கூறியது . என்னை 'தெய்வ குழந்தை ' என்றும். என்னுடைய சக்தியால்தான் அவளுக்கு குரல் கிடைத்ததாகவும் கூறியது "

" கோவில் நிர்வாகமும் பயந்தடித்து அவளை திரும்பவும் வேலைக்கு சேர்த்து கொண்டது "

' அஞ்சு தலை பாம்பை கண்டும்
அஞ்சாத நெஞ்சு குடை பிடிக்க 
துஞ்சாத செல்வமகள் அன்போடு
பஞ்சு விரல் கால் பிடிக்க 
தூங்காது தூங்குவது போல் 
நடிப்பை அரங்கேற்றும் அரங்கனை போல் அல்லாது
பாற்  கடல் மையத்தின் 
ஆழ்ந்த நிசப்தத்தில் 
கண்ணே நீ உறங்கு 
விடியும் வரை மனம் இறங்கு '

கோவில் நடை சாத்தும் வேளையில் என்னை மடியில் கிடத்தி அரங்கநாதன் மண்டபத்தில் அவள் தாலாட்டு பாடும் பொழுது  அந்த இறைவனே மயங்கி விடுவான் என்று சொல்லி அந்த ஊர் மயங்கியது .

  " அவளுக்கு எப்படி இப்படி ஒரு அபூர்வா குரல் வந்தது என்று ஊர் வினவும் பொழுதெல்லாம் நான் அவள் மார்பிலிருந்து பால் உறிஞ்ச உறிஞ்ச அவள் மனதில் குரல் ஊற்றெடுத்ததாக கூறினாள் "

" என்னை ஆச்சரியத்துடன் பார்த்தனர் அந்த ஊர் மக்கள் . என்னை தலை மீது தூக்கி  வைத்து கொண்டாடினர். சகல அன்போடும் வசதியோடும் 'தெய்வ' குழந்தை என்ற பெயரோடும் வளர்ந்தேன் " என்றாள்.

 " உங்கள் அம்மாவிற்கு எப்படி குரல் வந்தது ?" என்று கேட்டேன் . " ஊருக்கு சொன்ன கதையை எனக்கும் சொல்ல வேண்டாம் "

" அந்த கதையையும் சொல்கிறேன்" என்றாள் 

" என் அம்மா உடலால் ஆணாக பிறந்த ஒருத்தி "

" செல்வ செழிப்புடன் இருந்த  வீட்டில் ஒற்றை மகனாய் பிறந்தவள் "

" அப்பாவும் சித்தப்பாக்களும் தொழில் தொழில் என்று தொலைவிலேயே இருந்ததால்   அம்மாவும் சித்திகளும் மத்தியில் வளர்ந்தவள் "

" உடல் அளவில் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாகவே வளர்ந்தாள் "

" சிறு வயதில் அவளுக்கு சடை பின்னியும் போட்டு வைத்தும் அழகு பார்த்தாள் அவள் அம்மா "

" பின்பு 14 வயதில் அவளே போட்டு வைத்து கொண்ட பொழுது  அடித்தாள் . ' நீ ஆண்ணடா . என் இப்படி பெண் பிள்ளை போல் நடந்து கொள்கிறாய் என்று புழம்பினாள்"

" ஆண்களை பார்த்து வெட்க படுவதையும் பெண்களிடம் நட்பு கொள்வதையும் கண்டு தலையில் அடித்து கொண்டாள் "

" அம்மாவே வெறுக்கும் பிள்ளையை ஊர் எப்படி நடத்தும் என்று தனியாக சொல்ல தேவையில்லை "

" ஊரை விட்டு ஓடி ஒரு அலி கூட்டத்துடன் சேர்ந்தாள்.
அலிகள் பிழைக்க வழி இல்லாது தங்கள் மீது ஊர் வைத்திருக்கும் வெறுப்பையே பிழைப்பாக்கி கொண்டனர். கூட்டம் கூட்டமாய் சென்று பஸ்சிலும் ரயிலிலும் பயணிக்கும் மக்களின் அருகே சென்று காசு கொடுத்தால்தான் விலுகுவதுவாக மிரட்டினார்கள் . மக்களும் அவர்கள் மீதுள்ள வெறுப்பில் பயந்து காசுகள் கொடுத்தனர் "

" அப்படி காசுகள் சேர்த்து உடல் அளவிலும் பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்த பிறகே அவளுக்கு நிம்மதியாக இருந்தது "

" ஹார்மோனின் கைவண்ணத்தில் மார்புகளும் வளர்ந்து முழு பெண்ணாக மாறும் தருணத்தில் அவள் குரல் மட்டும் பெண்ணாக மாற முரண்டு பிடித்தது "

" தன்னையே ஊமையாக்கி கொண்டு முழு பெண்ணாக அந்த ஊர் கோவிலில் வேலைக்கு சேர்ந்தாள்"

" நான் குழந்தையாய் அழுவும் பொழுது செய்வது அறியாமல் தவித்தாள். பால் சுரக்காத மார்பை என் வாயில் திணித்த  பிறகுதான் என் அழுகை நிட்பதை கண்டாள்."        

" அந்த தருணங்களில் அவள் மனதில் தாய்மை சுரந்ததாகவும். முழு பெண்ணாக மாறிய தைரியத்தில் தாலாட்டு பாட குரல் எடுத்த பொழுது ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒரு தெய்வீக குரலாய் வெளி வந்ததாகவும் கூறினாள் "

" லக்ஷ்மி மைந்தன் , மற்ற கதை தான் உங்களுக்கு தெரியுமே !" என்று கூறி சிரித்தாள்.

நெகிழ்ந்திருந்த எனக்கு என்ன சொல்வதென்றே  தெரியவில்லை .

எல்லா அதிசியங்களுக்கு பின்பும் அன்பு ஒளிந்திருப்பதை புரிந்துகொண்டேன்.    
      

Monday 19 August 2013

செத்தும் குடித்தவன்

என் பழைய புத்தக கடையின் முக்கியமான வாடிக்கையாளன் அந்த எழுத்தாளன்  .

பெரியாழ்வாரின் திருபல்லாண்டையும்,  பெரியாரின் சிந்தனை  திரட்டுக்களையும்  ஒன்றாக வாங்கி செல்லும் வினோதன் அவன்.

வினவினால் " திருவிழா கடைதெருவில் வாங்கிய சிகப்பு கண்ணாடி மாட்டி திரியும் குழந்தையாக விருப்பம் இல்லை " என்பான் .

விளக்கம் கேட்டால் , " ஒரே கொள்கையை சார்ந்த புத்தகங்களை படித்தல், பல வர்ண  உலகை ஒரே வண்ணமாக்கி நம்மை ஏமாற்றும் " என்பான்.

என் கடைக்கு எதிரே பழ 'சரக்கு' கடை ஒன்று இருந்தது.

பழ சாரை பழசாக்கி புட்டியில் இட்டு விற்கும் ஒரு வினோத கடை .

கூட்டம் அலை மோதி  உள்ளே சென்று போதையில் ஒன்றுக்கொன்று மோதி வெளியே வரும் .    

' மூழ்கும் ஓர் ஊர் ' என்ற ஒரு பின் நவீன புதினத்தை படைத்து வந்து என்னிடம் காட்டினான் .

பெருங்கடல் ஆர்பெழுந்து ஒரு நகரை முழுகடிக்கும் பொழுது , அந்த நகரம் மூழ்குவது கூட தெரியாமல் அனைவரும் போதையில் இருப்பதாகவும், இறப்பது கூட தெரியாமல் இருக்கும் உயிர்களை குடிக்க அருவருப்பு பட்ட கடல் , குடித்தவன் எடுத்த வாந்தியை போல், அவர்கள் அனைவரையும் கரையிலேயே  துப்பி சென்றதாகவும் எழுதி இருந்தான் .

" இந்த கதையின் இன்னொரு கையெழுத்து பிரதி கிடைக்குமா?" என்று கேட்டேன் .

" இதையே வைத்துக்கொள் , எவனும் பிரசுகிக்க மாட்டேன் என்கிறான் " என்று என்னிடமே கொடுத்துவிட்டு போய் விட்டான்.

நல்ல வருமானம் வரும் கடை என்பதால் அரசே அந்த பழ 'சரக்கு' கடையை வாங்கி விட்டது .

அந்த கடையில் அதன் பிறகு , இரவு ஏழு மணி அளவில் தள்ளாடும் போதையர்கள் துள்ளி ஆட ' குத்து பாடல்களை ' இலவசமாக இரைச்சலுடன் அலற விட , என் கடை வாசலில் நண்பர்களுடன் இலக்கியம் விவாதித்து கொண்டிருக்கும் அவன், தலையில் அடித்து கொண்டு கலைந்து செல்வான்.

" செத்தாலும் நான் குடிக்க மாட்டேன் " என்பான்.

" செத்ததிற்கு பிறகு எவனாலும் குடிக்க முடியாது " என்று சொன்னேன் கிண்டலாய் .

" என் அப்பன் குடித்தான் " என்பான் வெறுப்புடன்.

"ஆறு மணி நேர அரசு வேலையிலும், இருபத்தி நாலு மணி நேர போதையிலும் இருந்த அந்த சத்துணவு சமயல்காரன் , ஒரு நாள் போதையில் என்ன செய்தான் என்று தெரியவில்லை, அவன் உடல் அடுக்கரை தீயில் பாதி எரிந்ததாக செய்தி வந்தது "


" ஓடி பார்க்க சென்ற அம்மாவிடம், அவன் கடைசி ஆசை அவனது கனவு அயல் நாட்டு சரக்கை மூடி திறக்காது அவனுடன் கல்லறையில் வைத்து மூட வேண்டும் என்பதுதான் என்று சொல்லி அம்மாவிடம் சத்தியம் வாங்கிவிட்டு மூச்சை விட்டு விட்டான் "

" உண்டியல் உடைத்து அந்த பாழும் சரக்கு 'பாட்டிலை'  வாங்கி அவனுடன் பாடையில் வைத்து, தப்பை அதிர அழைத்து சென்று , 'எரிக்கும்' பழக்கம் உள்ள நாங்கள் அந்த பாதி வெந்த உடலை புதைக்கும் பொழுது , அவனுடன் இருந்த அந்த 'பாட்டில்' என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பதாக தோன்றியது "

" மதுவுக்கு அடிமையான மற்றொரு மண்டு குடிக்க காசில்லாமல், என் அப்பன் கல்லறையை அந்த 'பாட்டிலுக்காக' தோண்டியவன் , 'பாட்டிலில்' பாதி சரக்கு இருப்பதை பார்த்து பயந்து , ' இறந்தும் குடிக்கிறான்' எங்கப்பன் என்று ஊரெல்லாம் பரப்பி விட்டு விட்டான். ஏற்கனவே தோண்டி எடுத்து குடித்தவன் பக்கத்து கல்லறையில் இருந்ததால் அவன் சொல்வதை ஊர் நம்பி விட்டது "  என்று சொல்லி கதையை முடித்தான் விரக்தியில் .

சில நாள் சென்று, முறுவலுடன் வந்தான் . தன் அம்மா தனக்கு பிடித்தார் போல் ஒரு பெண் பார்த்திருப்பதாக  கூறினான்.

சில நாள் சென்று கவலையுடன் வந்தான் . வருங்கால மாமியார் இப்பொழுதே தன் ஏழ்மையை இகழ்வதாக சொன்னான் .

சில நாள் சென்று என் கடை பக்கம் வருவதையே நிறுத்தி கொண்டான் .

அக்கம் பக்கம் விசாரித்ததில் அவன் திரை பாடல்கள் எழுதி வருவதாகவும் . நல்ல புகழும் சம்பாத்தியமும் இருப்பதாக கேள்வி பட்டு அகம் மகிழ்ந்தேன்.

எதிர் கடையில் வழக்கம் போல் 'குத்து பாட்டு' பாடி கொண்டிருந்தது . ஒரு புது பாடல் ஒன்று பாடி கொண்டிருந்தது .

" ரம்மு ரம்மு ரம்முதான் ... ராவா அடிக்கும் நம்ம அண்ணன் சிங்கம் கம்மு கம்முதான்"

" எவன் இதை பாட்டென்று எழுதியது ? " என்று வேடிக்கையாக நான் என் வாடிக்கையாளரை கேட்டேன் .

" ஜின்னு ஜின்னு ஜின்னுத்தான்... நம்ம தலைவன் திருப்பி அடிச்சா வின்னு வின்னு வின்னுதான் " - அடுத்த வரி.

" உங்க நண்பர்தான் " என்று அந்த எழுத்தாளனின் பேரை பெருமையுடன் சொன்னார் அந்த வாடிக்கையாளர் .

அந்த குத்து பாடல் 'வின்னென்று' என் வயற்றில் குத்தியது போல் இருந்தது.

" என்னப்பன் செத்த பிறகும் குடிச்சவன்டா. நான் தொப்புள் கொடியிலேயே சரக்கு அடிச்சவன்டா "

என்ற அடுத்த வரியை வாடிக்கையாளரின் சின்னஞ்சிறிய பையன் பாடலுடன் சேர்ந்து பாட, அதை மிகவும் ரசித்து சிரித்து கொண்டிருந்தார் அந்த அப்பா . 

Thursday 15 August 2013

ஒரு நட்பின் மரணம்

" எல்லாமே அரசியல் தான் " - என்றான் என்  'அறிவுஜீவி' நண்பன் .

" அப்போ , காதலும் அரசியலா ?" - காதலில் லயந்திருக்கும் என் 'சாமான்ய' நண்பன் அவனிடன் கேட்டான் .

" சிரிப்பால் வலை விரித்து , அழுகையால் நழுவும் கலை  தெரியாத ஆண் உனக்கு, வலையில் மாட்டிய விலாங்காக துடிக்கும் பொழுது விளங்கும் காதலின் அரசியல் "  -  'அறிவுஜீவி'.

" நமது தேசிய கொடியில் ஏதேனும் அரசியில் இருக்கிறதா ? " -  சமானியத்தை விட குறைவான நான்.

" மூவர்ணமாய் மக்களை பிரித்து நடுவே அரசியல் சக்கரத்தை ஒட்டி கொண்டிருக்கும்  அரசியல்வாதிகளின் கட்சி கொடி அது " - அறிவுஜீவி

" தாய் அன்பில் ஏதேனும் அரசியல் ? " - சாமானியன்.

" உனக்கு மணமான பின்பு உன் மனைவிக்கும் அவளுக்கும் நடக்கும் உள்ளாட்சி தேர்தலின் மோதலில் புரியும் அவள் அன்பின் அரசியல் " - அறிவுஜீவி .

அவனின் வசீகர பேச்சில் மயங்கியே நாங்கள் இருவரும் அறிவுஜீவியின் நண்பர்கள் ஆனோம் .

'"பேச்சு உரிமை மூச்சி உரிமை . அதை ஒடுக்குவதும் கழுத்தை நெரிப்பதும் சமம்" என்பான் .

அவன் கருத்திற்கு மாற்று கருத்து சொன்னால், அவன் தன் குரல் உயர்த்தி , பேச்சின் அழகை இன்னும் மெருகு படுத்தி  மாற்று கருத்தை முழுகடிக்க முயற்ச்சிப்பான் .

சில நேரம் தோற்று விட்டால் சில தினங்கள் நம்முடன் ஒழுங்காக   பேச மாட்டான் .

அவன் மேல் உள்ள அதீத நேசத்தில் , அவனின் கருத்திற்க்கு மாற்று கருத்து சொல்வதை முற்றுமாக விட்டாகி விட்டது . அதற்கு  பின்னரே அவனின் நெருங்கிய நண்பர்கள் ஆனோம், நானும் அந்த சமானியனும்.

சாமானியன் தன் காதல் முறிந்து விட்டதாக சொன்ன பொழுது , தான் முன்பே அவனை எச்சரித்ததாக கூறி சிரித்தான் .

சாமானியன் தன் அறையை சிறை ஆக்கி  கொண்டான். உண்ண மறுத்தான் . உணர்ச்சி மரத்தான்.

" ஏதாவது செய் ! " என்றேன் அறிவுஜீவியிடம் .

" இல்லாத கடவுளையும் காதலையும் , கண்டதாகவும் தொலைத்ததாகவும் சொல்லுபவரிடம் எதை சொல்ல !"
என்றான் நையாண்டியுடன் .

" மன நல மருத்துவரிடம் அழைத்து செல்லலாம் " - என்றேன் .

மிகவும் சினம் கொண்டான் . " ஆறு வருட காதலை அரை மணி நேர கதையாய் கேட்டு , ஆழ்ந்து தூங்க ஆறு மாத்தியரை எழுதுவார், மனதை பற்றி மருந்துக்காக மட்டும் அறிந்த மருத்துவர் " என்றான் .

" என்னதான் செய்வது ? " - நான்

" மற்றவர் துக்கத்தில் உன் மூக்கை நுழைக்காது போய் தூங்கு " - என்றான் அறிவுஜீவி .

மனம் கேட்காமல் , சாமானியனை வற்புறுத்தி , ஒரு படம் பார்க்க 'மால்' ஒன்றிர்க்கு அழைத்து சென்றேன்.

நான்காம் மாடியில் இருந்து தாழ்வாரத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த சாமானியன் என்னிடன் " டிக்கெட் வாங்கி வா, காத்திருக்கிறேன் " என்றான் .

சற்று விலகி செல்வதற்க்குள், காத்திராமல், மேலிருந்து கீழே குதித்து உயிர் தொலைத்தான் .

அதிர்ச்சியில் சில நாட்கள் உறைந்து இருந்தேன். அறிவுஜீவி அந்நாட்களில் என்னிடம் எதுவும் உரைக்காமல் இருந்தான் . என் துக்கத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்கிறான் என்று நானாக நினைத்து கொண்டேன்.

பின்பு ஒரு நாள்,

அறிவுஜீவி என் அருகே வந்தான். ஆறுதல் கூறுவான் என்று எதிர்பார்த்த என்னிடம் , " அவன் துக்கத்தில் மூக்கை நுழைக்காதே என்றேன் . என் பேச்சை கேட்காமல் கூட்டி போய் அவன் உயிரை   எடுத்துவிட்டாயே " என்றான் .

ரணமான மூளையை சரி செய்கிறோம் என்ற பெயரில் பழுக்க காட்சிய கம்பியை கபாலத்தை துளைத்து இறக்குவார்களாம் பழங்கால மனிதர்கள். அப்பொழுது துளைக்கபட்டிவனின் வலியை இப்பொழுது இவன் வார்த்தையை கேட்ட பொழுது உணர்ந்தேன்.

" அழுது கொண்டிருந்தவனுக்கு  ஆறுதலாய் ஒரு வார்த்தை கூட சொல்லாதவன் நீ. தீவிர மன  சோர்வில் அவன் இருந்த பொழுதும் மருத்துவம் தேவை இல்லை என்று சொன்னவன் நீ. நான் அவன் உயிரை எடுத்தேனா? சொல்லு ! " - அவன் சட்டையை இறுக்கி  பிடித்து அழுத்தமாகவே கேட்டேன்.

உதறிக் கொண்டு கோபமாய் வெளியேறினான் .

பிறகு அவன் செய்தது நான் சற்றும் எதிர் பார்க்காதது .

சமூக வலைத்தளம் அனைத்திலும், ஊரெங்கும் " போஸ்ட்டர் "  ஓட்டுவதை போல் என்னை பற்றிய 'போஸ்ட்டு'களை போட்டு வைத்திருந்தான் .

ஏற்கனவே மனம் நொந்த நண்பனை , " நீ ஒரு மனநோயாளி , வா மருத்துவரை பார்க்கலாம் " என்று விடாது சொல்லி, வற்புறுத்தி அவன் வேதனையை பன் மடங்காய் அதிகப் படுத்தினேனாம் .

மனோதத்துவும் புரியாது , சோகத்தில் இருக்கும் அவனை , அனைவரும் களிப்போடு சுற்றி திரியும் மாலிற்க்கு  அழைத்து சென்று இம்சித்து, அவன் தற்கொலை செய்ய வைத்த மைய காரணியாக என்னை சித்தரித்து இருந்தான்

தனி மனித சோகத்தில், நாகரிகமே இல்லாமல்  தலை இடும் என் போன்ற நண்பர்களால் தான் தற்கொலையின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாக கூறி இருந்தான் .

என்னை கண்டித்து விமர்சனங்கள் என் வலை பக்கத்தில் குவிந்த வண்ணம் இருந்தது .

எல்லாவற்றிலும் அரசியலை பார்ப்பவன் நட்பை மட்டும் விட்டு வைப்பான் என்று எண்ணியது என் மடத்தனமே .

'நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் மிகவும் வேதனையானது' என்று 'முட்டாள்' நான் இங்கு  வருந்தும் பொழுது எங்கிருந்தோ வெற்றி சிரிப்பு சிரித்து கொண்டிருப்பான்  அந்த 'அறிவுஜீவி' . 

Monday 12 August 2013

ஒரு 'கதை சொல்லியின்' கதை

ஒர் காலத்தில் அந்த கதை சொல்லியின் கதையை கேட்க இரவு எட்டு மணிக்கு அந்த கிராமமே ஆல மரத்தடியில் ஆர்வமோடு கூடி இருக்கும்.

ரேடியோ பொட்டி வந்த உடன் கூட்டம் பாதி ஆனது. திரை அரங்குகள் அதிகமாக 'கால்' ஆனது. தொலைகாட்சி வந்தவுடன் தொலைந்தே போனது.

கதை சொல்லியின் மனதில் கதைகள் கருவாகி உருவாகி கொண்டே இருக்கும் . கேட்க காதுகள் கிடைக்கும் வரை பிரசவ வலிதான்.

இப்பொழுது பிரசவிக்க காதுகள் இல்லாததால் , மனதுக்குள் முண்டி அடித்து பிறக்க துடித்து கொண்டிருக்கும் கதை குழந்தைகளை சமாளிக்க அவனுக்கு தெரியவில்லை .

நரை  விழுந்து விட்டது. வீடுதோறும் பழைய பேப்பரை எடைக்கு எடுத்து பொழப்பு நடத்தி கொண்டான். எட்டு மணி ஆன உடன் தன் வீட்டு சுவற்றில் கரி துண்டினால் வரைய பட்ட மனித உருவங்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்து விடுவான் .

தனியே பேசுபவனை பைத்தியம் என்று நினைத்த கூட்டம் அதே ஆலமரத்தடியில் கூடி பேசி பட்டணத்தில் இருக்கும் ஒரு மன நல காப்பகத்திற்கு அவனை குண்டு கட்டையாக தூக்கி சென்றது .

" என்ன பிரச்சனை " - மன நல மருத்துவர் .

" தனக்கு தானே பேசிக்கிறான் " - கூட்டம் .

" என்னையா, தனியா இருக்கும் பொழுது யாராவது பேசுற மாதிரி குரல் கேட்குதா ? " - மருத்துவர் .

" கேட்குது , மனசு என்கிட்ட கதை கதையாய் சொல்லும். கேட்க ஆளில்லை . அதான் வீட்டு சுவற்றுகிட்டே சொல்வேன் " - கதை சொல்லி.

" அவனுக்கு என்ன பிரச்சனை ? " - கூட்டம்.

" கிரியேடிவிட்டி " - மருத்துவர் .

"என்ன விட்டியோ கொஞ்சம் சரி பண்ணி அனுப்புங்க" - கூட்டம்.

" நோயுள்ளவனை பேய் பிடிச்சிருச்சின்னு மரத்துல கட்டி வைத்து அடிப்பீங்க . நல்லா இருக்கவனை கூட்டி வந்து வைத்தியம் பார்க்க சொல்லுறீங்களா ? ஒடுங்க எல்லோரும் "   - அதட்டினார் மருத்துவர் .

'இந்த டாக்டரே பைத்தியம் போல' என்று முணுமுணுத்த படி கலைந்து சென்றது கூட்டம் .

ஊர் திரும்பி , வீட்டினுள்  அமர்ந்து சுவற்றை வெறித்த படி செய்வது அறியாமல் உட்கார்ந்து இருந்தான் கதைசொல்லி .

அப்பொழுது கதவை திறந்து கொண்டு ஒருத்தி உள்ளே நுழைந்தாள்.

சுருங்கிய நெற்றியில் விரிந்த குங்குமத்துடனும், வயோதிகத்தை மெலிதாய் மறைக்கும் ஒப்பனையுடன் அவனை பார்த்து சிரித்தாள் .

" கதை கேட்கலாமென்று  வந்தேன் " என்றபடி சுவரில் சாய்ந்து சம்மனமிட்டபடி அமர்ந்தாள் .

அதிர்ச்சிக்கு உள்ளானான் கதை சொல்லி. சுதாரித்து , சற்று பூரித்து, கதை சொல்ல தொடங்கினான் .

கதை முடிந்தவுடன் , சிறு குழந்தையை போல் கை தட்டினாள் அவள் . நாளைக்கும் இந்த நேரம் வருவதாக சொல்லி சென்றாள்.

கதைசொல்லிக்கு, 'அவள்' தன் கதையில் வரும் ஒரு பாத்திரமா?, அல்லது உண்மையானவளா? , என்று ஒரு மயக்கம் வந்தது .

அவள் தன் வாழ்வை அசை போட்ட படியே தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

சிறுமியாய் இருக்கும் பொழுதே அவன் கதையை கேட்க ஆர்வமாய் முதல் இரெண்டு வரிசைக்குள் உட்கார்ந்து இருப்பவர்களின் ஒருத்தி அவள்.

" கதை சொல்லியைதான் கட்டிப்பேன்" என்று அவள் சொன்ன பொழுது , அவள் அம்மா 'பளார் ' என்று ஒரு அரை விட்டு , ' உன் அப்பா கதைசொல்லியின் கதையையே முடித்திடுவார் . அவரிடம் உளறி வைக்காதே' என்று சொன்னது ஞாபகத்தில் வந்தது அவளுக்கு .

அவள் கல்யாணம் அவளை ஒரு பண்டம் செய்து பரிமாறும் ஒரு எந்திரமாய் மாற்றியது.

எந்திரம் சற்று பழுது அடைந்ததால் , அவளை சொந்த ஊரில் விட்டு சென்றனர் எந்திரமாய் பெத்து போட்ட பிள்ளைகள் . கணவன் இருந்தான் மடிந்தான் என்பதை தவிர்த்து சொல்வதற்க்கு ஒரு கதையில்லை .

பழுது ? ... அவள் காது சற்றும் கேட்காமல் போய்  விட்டது !

உறவுகள் அனைத்தும் அற்று போனதும் சுகந்திரமானாள். சுகந்திரம் அடைந்தவுடன் தன் கதை சொல்லி காதலனை தேடி போனாள்.

கண்களால் கதை கேட்டு , ஆன்மாவால் கை தட்டி விட்டு, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள்.

" காது கேட்காத காஞ்சனா கதைசொல்லி கதவை தட்டி காண்டாமிருகம் கதை கேட்டாளாம் " என்று பகடியாய் அந்த ஊரில் வலம் வந்த பழமொழி ,  அவள் கதை சொல்லியின் மீது வைத்த காதலை காலம் தாண்டி சொல்லி கொண்டே இருந்தது .

Saturday 3 August 2013

காதல் கோடு

ஒரு எண்பது பக்க கோடு  போட்ட நோட்டு .

பக்கங்களை அவள் புரட்ட புரட்ட, நெஞ்சத்தில் ரணம் புரண்டது.  

ஒவ்வொரு பக்கத்திலும் அவன் எழுதிய கவிதைகள்.

' முதல் பக்கத்தில் உன் பெயர் எழுது . ' - அவன்.

எழுதினாள்

அவள் பெயருக்கு  கீழே எழுதினான் .

' இனி
 மற்ற கவிதைகள்  | '

அன்று  வழக்கமானது என்று புறம் தள்ளிய கவிதை இன்று ஏதோ செய்தது .

"உன் கோவில்
கருவிழி குளத்தில்
குளித்து கழிக்க
பாவங்கள் செய்பவன்
நான் | "

பாவம் என்று எதை சொன்னான் , இருள் அடர்ந்த கோவில் குளக் கரையில், யாருக்கும் தெரியாமல் உயர் ஜாதி பெண்ணாகிய எனக்கு, காமம் குறைந்த உயர் ஜாதி காதலையும் சில கவிதைகளையும் தந்தது பாவம் என்கிறானா .

" 'என்ன சாதி' என்றார்
சாதியில்லா சாதி என்றேன்
'நீ பைத்தியமா?' என்றார்
இல்லை
'நான் காதலன்.' என்றேன் | "

'ஊர் கூடி அடித்ததிற்கும் இப்படி கவிதை எழுதுபவனே என் காதலன் ' என்று நினைத்து கொண்டாள்.

" பெண்ணே ...
தாசி வீட்டில் புணரும்பொழுது
உணராத சாதி,
ஊர் கூடி மணக்கும் பொழுது
மணக்கிறதே | "

படித்தவுடன் கவிதையை அடித்து விட்டாள்  . " அசைவம் எனக்கு  பிடிக்காது " - என்றாள் .

" உண்மை எப்பொழுது அசைவம் ஆனது? " என்றான் .

உண்மைதான் , சாதி பெயரால் வயிர் வளர்க்கும் அவள்  அண்ணன் பற்றிய உண்மை கவிதை அது .

" மனிதனற்ற
அயல் சாதியை கண்டெடுக்க
அண்டம் தாண்டி செல்கிறது
நாசா விண்களன்
'அயல் சாதி' என்னை கண்டெடுத்து
கண்டம் ஆக்க
உயிர் நாச கருவிகளுடன்
தேடி அலைகிறது
 பரிணாம வளர்ச்சி அற்ற
 ஓர் ' உயர் சாதி ' | "

" ஏன் வந்தாய் . யாரும் பார்ப்பதற்குள் ஓடிவிடு !" என்று அவள் சொன்ன பொழுது அவள் நோட்டை பிடுங்கி சட்டென்று கிறுக்கி விட்டு சென்ற கவிதை அது .

அவன் இப்பொழுது இல்லை . மலை மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து  கொண்டானாம். சொல்கிறார்கள் பாவிகள் .

"ஊர் முன்னாடி அவனுக்காக அழுது நம் சாதியின் மானத்தை வாங்காதே " என்று அவளை ஒரு அறைக்குள் தள்ளி தாளிட்டனர்.

இறந்த பின்னும் எண்பது பக்கத்து நோட்டில் இருக்கும் அவனே துணை .

மீண்டும் மீண்டும் கவிதைகளை புரட்டும் பொழுதுதான் அவள் அதை கண்டாள்.

எல்லா கவிதைகள் முடியும் பொழுது ஒரு கோடு ஒன்று இருந்தது .' | '

ஏன் அந்த கோடு ... வியந்தாள்... கேட்க அவனில்லாததால் அழுதாள் .

அப்பொழுது திறந்திருந்த சன்னல் வழியே 'கல்'  ஒன்று விழுந்தது .

வெளியே எட்டி பார்த்தாள். அங்கே அவனின் நண்பன் ஒருவன் அவளை பார்த்து கை அசைத்து விட்டு ஓடி விட்டான் .

அந்த கல்லை சுற்றி ஒரு காகிதம் இருந்தது .

அதை பிரித்தாள்.
 
அதில் அவளின் 'அவனின் ' கையெழுத்து . நெகிழ்ந்தாள்.

அதில் எழுதி  இருந்தது

உன்னை பற்றி நான் சொல்ல விரும்பிய ஒரே கவிதை  

" | " 

" நீ ஒரு முற்று புள்ளி இல்லாத ஆச்சரிய குறி " 

அவள் வெடித்து அந்த காகிதத்தில் முகம் பொதித்து அழுதாள் .

சாதிகளுக்கு புரிபடாத காதல் ஒன்று கண்ணீரோடு சேர்ந்த கவிதையாய் வழிந்து கொண்டிருந்தது .