Tuesday, 30 July 2013

மடயர் இனத்தின் மதங்கள்

பூகோளம் என்று ஒரு கிராமம்.

அதில் மடயர் என்று ஒரு இனம் வாழ்ந்து வந்தது.

வெறுப்பு உணர்வை வாழ்வாதாரமாக வைத்து இயங்கி  வந்தது.
அவினத்தில் வெறுப்பு உமிழ தெரியாத மூளையை கொண்ட ஒரு ஊனமுற்ற குழந்தை பிறந்தது .

குழந்தை வளர வளர அது ஒரு வினோதத்தை கண்டது.
மடயர் அனைவரும் ஒரே இனம் ஆயினும் அவர்கள் மூன்று பெரும் மதங்களாகவும் மூவாயிரத்தெட்டு உட்பிரிவுகளாகவும் பிரிந்தவர்கள் போல் ஒரு மாயையில் வாழ்ந்துகொண்டிருந்தனர்.  

மதங்கள் உருவான சங்கதியை நூலக பரணில் தூசி தட்டி ஒரு புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டது அந்த குழந்தை .


                                                 'கேச'  மதத்தின்  வரலாறு

ஆதி கால மடயர் இனத்தவர் அனைவரும் சுருள் முடி கொண்டவர்களாக இருந்தனர் .

கொஞ்சம் முன் மூளை வளர்ந்த ஒரு அறிங்கன் சிரத்தை எடுத்து தன் சிர முடியை நேராக்கி தன் தோல் வரை படர விட்டான்       

அவனுக்கு விசிறிகள் விரிந்தனர். அனைவரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு நூதன முறையை கையாண்டான்.  
  
மிகவும் நீண்ட கேசம் கொண்ட ஒரு சிலையை செய்தான். இவர்தான் இறைவன் என்றும், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று ஒரு கையேடு தன்னிடம் ரகசியமாக கொடுத்திருப்பதாகவும்  கூறினான். அதன் மூலம் அனைவரையும் பதப்படுத்தலாம் என்று பகல் கனவு கண்டான்.

அவன் இறந்து சில சந்ததி கடந்து தன் மீசை மீது ஆசை வைத்த ஒரு சிற்பி அந்த சிலைக்கும் மீசை வைத்து அழகு பார்த்தான்.

இன்னும் சில சந்ததி கடந்து மீசை வைத்த மற்றும் வைக்காத சிலை ஒரே சிலை என்று அறியாது அது 'மாமனும் மச்சானும்' என்று நினைத்து கொண்டது .

சில ஆண்டுகளில் 'கேச' மதம் , மீசை மாமனை வழிபடும் 'மீசைவம்' என்ற இனமாகவும், 'கேசம்' மட்டும் கொண்ட மச்சானை வழிபடும் 'கேசைவம்' என்ற இனமாகவும் பிளவுபட்டு ... மாற்றி மாற்றி வெட்ட பட்டு  மற்றும் குத்த  பட்டு வந்தனர்      

                                                 'மொட்டை' மதத்தின்  வரலாறு
         

அனைவரும் அடித்துகொள்வதை காண சகிக்காது அடயாளங்கள் அற்று அனைவரும் ஓர் இனம் என்று குறிக்கும் வண்ணம் தன் முடி அனைத்தையும் மழித்து கொண்டு வலம் வந்தான் ஒரு ஞானி .

அவன் பின் ஒரு மொட்டை கூட்டம்  கூடியது.

பொறுக்க முடியாத 'கேச' மதத்தினர் ஞானிக்கு திருட்டு பட்டம் கட்டி , பெரிய பாறையை முதுகில் ஏற்றி  கடற்கரை வரை ஊர் பார்க்க நடக்க விட்டு , கப்பல் ஏற்றி நடு கடலில் பாறையை ஞானியுடன் சேர்த்து இரும்பு சங்கிலியால் பிணைத்து, நைய்ய புடைத்து,  ரத்தம் சொட்ட சொட்ட, சுறா மிகுந்த நடுக்கடலில் தள்ளி விட்டனர்.  

பாறையில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட ஞாநியின் உருவத்தை கோவில்களில் வைத்து வழிபட ஆரம்பித்தது  'மொட்டை' மதம். 

பிறகு 'பாறை'யை மட்டும் வணங்குவோர் (பாறை கோஷ்டி ) ஓர் புறமும், இரும்பு சங்கிலியை வணங்குவோர் ( சங்கிலி கோஷ்டி ) மறுபுறமுமாய் பிரிந்து 'மொட்டை' மதம் 'ரெட்டை'  மதம் ஆனது . 


                                                      'முண்டாசு' மதத்தின்  வரலாறு


உருவங்களை வழிபடும் வரை கோஷ்டி உருவாவதை தவிர்க்க முடியாது என்று அறிந்த ஒரு அறிவாளி 'அரூப' கடவுளை அனுஷ்டித்தான் . கடவுள் சித்தமாகவே இருந்தால்   தமக்குள் சண்டையிடுவது குறையும் என்ற நோக்கத்தில் ஒரு நாளில் ஏழு முறை கடவுளை வணங்கும் சில சாங்கியத்தையும்  ஏற்படுத்தினான்.

வெயிலில் பிராயணபட்டு பல இடங்களில் போதனை செய்த அவன் , வெயிலில் இருந்து தன்னை காத்து கொள்ள முண்டாசு கட்டி கொண்டான்.

'முண்டாசு' மதம் பிறந்தது .

பின் வந்த சந்ததி  வியர்த்ததால் முண்டாசை கழற்றியவர்களை முற்சந்தியில் வைத்து அடித்தது . ஏழு முறைக்கு பதிலாக ஆறு முறை கடவுளை வணங்கியவர்களை மத எதிரிகளாக அறிவித்து தலை கீழாக தொங்க விட்டது .

முண்டாசில்லாத பிற மத மண்டைகளை அதனால் சகித்து கொள்ள முடியவில்லை . 



குழந்தை நூலகத்தை விட்டு வெளியே கற்று உணர்தவனாக வந்தான்  .

தன்னை 'மதமற்றவன்' என்று பிரகடனம் செய்து கொண்டான்.

'மொட்டை' அடித்து முண்டாசு கட்டி  பெரிய மீசையை வைத்து கொண்டான். கடவுள்கள் வேண்டாம் என்றான். மதங்கள் வேண்டாம் என்றான். அன்போடு பூலோகத்தை அனுபவிப்போம் என்றான் . அவன் பேச்சில் மயங்கி பெரும் கூட்டம் சேர்ந்தது . 

அவ்வாறாக சேர்ந்த ஒரு பெரும் கூட்டதில் வெடித்த குண்டில் பலியானான் 'மதமற்றவன்'.

அவன் அனுதாபிகள், கடவுளை நம்புவோர்களை கேலி செய்தனர் , சிலைகளை பதம் பார்த்தனர், கோயில்களை 'மூடர் கூடம்' என்று சொல்லி   இடித்தனர் .

'மதமற்றவனின்' மதம் என்று ஒன்றை  உருவாக்கினர்.

Sunday, 28 July 2013

முதல் ரெண்டு கதைகள்

2,27,000 ஆண்டுகளுக்கு முன்பு,

மேற்க்கு மத்திய ஆபிரிக்காவின் ஓர் அடர்ந்த காடின் ஊடே மரத்தில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு   மனித சந்ததி தன்னை ஆதம் என்று கூப்பிடுவார்கள் என்று அறியாமல், தன் மேனியை ஒத்த தன் கருத்த கண் மணிகளை   ரோமம் குறைந்து எழில் நிறைந்த ஏவாளின் தேகத்தில் அலைபாயவிட்டு கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் ரோமம் வளர வளர  அவன் கண்ணில் வளர்வது காமம்தான் என்று அறியாத பெண்ணாகிய ஏவாளுக்கு அவன் தொடல் வேண்டி ஏங்கும் தன் உடலின் மனோதத்துவமும் புரியவில்லை.

எல்லையை கடப்பது  எப்படி என்று தன் மார்போடு அனைத்து பிடித்திருந்த முயலை வருடியபடி வியந்துகொண்டிருந்தான்.

அவன் எல்லைகள் கடந்து தொல்லைகள் தருவதை அனுபவிப்பதற்க்கு முன் தன்னை துகள் அளவாவது விரும்புகிறானா என்பதை  அறிவதெப்படி என்று தன் கையில்  உள்ள ஆப்பிளை  உருட்டியபடி யோசித்தாள்.

யோசிக்க யோசிக்க எல்லைகளின் எண்ணிக்கை அதிகமாவதை தவிர நடபதற்க்கு   ஒன்றுமில்லை என்று யோசித்ததால் முயலை விடுத்து முயலும் எண்ணத்தோடு முன்னேறினான்.

பதற்றதோடு பின்னேறிய அவளின் பாதங்கள்  ஓர் புதரினை பதம் பார்க்க  ...
கையிலிருந்து ஆப்பிள் நழுவி உருண்டோட...
புதருளிருந்து  ஆப்பிளை முட்டி தள்ளியபடி பரபரப்பாக ஓடியது ஓர் பழுப்பு நிற பாம்பு .
 
அலறியடித்து  தடுமாறி கீழே விழுந்தாள்.  ஆதாமின் காமம் கணப்பொழுதில் கணிவாகி உருண்டோடிய  ஆப்பிளை எடுத்து  கொடுத்து அவளிடம்  அவன் மிகவும் பயப்படும் அழுகை என்னும் அஷ்த்திரத்தின்  வீரியத்தை குறைக்க முயற்சித்தான்.

ஆப்பிளின் மேலே பல்  பதிந்த தடம் போல் ரெண்டு  பள்ளங்கள் இருந்தன . ஆப்பிளை பாம்பு கடித்துவிட்டு சென்றுவிட்டது  என்று குறிக்கும் வண்ணம் ஆதாமை நோக்கி சைகை செய்தாள்  ஏவாள்  

பிறகு ஒரு வினாடி யோசித்து ஆப்பிளை ஆதாமிடம் நீட்டினாள். ஆப்பிளை ஆதாம்  சாப்பிட்டால் தன்னையே அவனுக்கு  தருவது போல் சைகை செய்தாள். தன் கண்ணில் இட்சையை காரியமாக  படரவிட்டாள்.

நாடி அடங்கி ஓடி விடுவான் என்பது அவள் எண்ணம்.

ஆனால் அவன் ஆப்பிளை படக்கென்று பிடுங்கி நருக்கென்று கடித்தான்.

திகைந்து போன  ஏவாள்  அவன் முழுங்காத வண்ணம் கழுத்தை பிடித்து கொண்டாள். துப்பும்படி சைகை செய்து அவன் துப்பும் வரை கழுத்தை விடவில்லை.

துப்பிவிட்டு கழுத்தை விடுவித்து கொண்டு மூச்சிறைக்க உட்கார்ந்தான் ஆதம்.

காதல் பொங்க அவனை வாரி அனைத்து கொண்டாள் ஏவாள்.      பிறகு ....

இருட்டிவிட்டதால் என்ன நடந்தது என்று தெரியவில்லை .

                                                          கதை எண் ஒன்று 

ஆப்பிளின் மேலே பல்  பதிந்த தடம் போல் ரெண்டு  பள்ளங்கள் அவள் நகத்தால் ஏற்படுத்தியது என்பது அவளுக்கு தெரியாதா என்ன?

                                                          கதை எண் ரெண்டு 

ரெண்டு நாட்களுக்கு முன் இதே பழுப்பு நிற பாம்பு ஒரு முயலை கடித்தது. நுரை தள்ளி சாகும் என்று அந்த முயலை கவனித்து கொண்டே இருந்தான் . சற்று முன் அவன் மார்போடு அனைத்திருக்கும் வரை அது சாவதற்க்கு அறிகுறி எதுவும் இல்லை. விஷமில்லா பாம்புகளும் உண்டு என்று அப்பொழுதுதான் அவனுக்கு தெரிந்தது. 

                                                            கதை எண் மூன்று 

மானுடம் ... !