Friday, 23 September 2016

அதிர்ஷ்டகார பிணம்

அங்கே மர்மமான முறையில் இறந்த ஒரு பிணம் நடு வீதியில் கிடத்த பட்டு இருந்தது .

விஷயம்  தெரிந்து ஒரு மஞ்சள் கொடி கூட்டம் அங்கே வந்து  சேர்ந்தது .

சில முக்கிய விசாரனை கேள்விகள் கேட்டது .

" பிணம்  என்ன சாதி ? " 

மஞ்சள் கொடியை சார்ந்த எந்த சாதியும் இல்லை.

தங்கள் சாதி  என்றால் பிணத்திற்கு மாலையிட்டு அவர்களெல்லாம் பிணம் போல் சாலையில் படுத்து கொண்டு, அந்த பிணத்தை கொன்றவனை உடனே பிடிக்க வேண்டும் என்று, ஒரு நவீன மறியல் செய்யலாம் என்று ஆர்வமாக  வந்த கும்பலுக்கு ஏமாற்றமாய் போனது.

ஒரு பின் யோசனையாக " கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்க படுகின்றவன் என்ன சாதி?  "

அதுவும் ஒரு மஞ்சலற்ற சாதி .

அவன் மஞ்சள் சாதியாய் இருந்தால் அவனுக்கு முன்ஜாமீன் எடுத்து விட்டு பிணத்தை பற்றி  சில  அவதூறுகளை மஞ்சள்  நிற  நிருபன் மூலம் புலன் விசாரனை என்ற பெயரில் வெளியிடப்படும் மஞ்சள் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பாக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை .

மிகவும் நொந்து கொண்டு வேறு எதுவும் மஞ்சள் கொடிக்கு ஏதுவான பிணம் கிடைக்குமா என்று மோப்பம் பிடித்து கொண்டே சென்றது அந்த கூட்டம் .

பிறகு ஒரு கறுப்பு கொடி கூட்டம் . அதே கேள்விகள் .  பிணத்திற்கும் கொன்றவனாக கூடியவனுக்கும் கறுப்பு கொடிக்கும் சம்பதமில்லை என்றவுடம் மிகவும் கடுப்பாகி போனது அந்த கூட்டம் .

எந்த  பயன்பாடும் இல்லாத பிணங்கள் எதற்குதான்  விழுகின்றன  என்று முனகி  கொண்டே சென்றது  அந்த கூட்டம் .

மூச்சற்ற பிணம் ஒரு  நிம்மதி பெருமூச்சை விட்டது . அந்த நிம்மதியின் அர்த்தம் புரிய  அந்த பிணம் உயிரோடு இருந்த பொழுது நடந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது .

சில வருடங்களுக்கு முன்பு மஞ்சளும் கறுப்பும் அடித்து கொண்டு பெரும் கலவரம் . சாதியை ஒட்டிய கலவரம் என்பதால் ஓட்டிழக்க மணமில்லாமல் ஆளும்  உட்பட எந்த கட்சியும்  அந்த கலவரத்தை கண்டு கொள்ளவில்லை.

மேல் உத்தரவில்லாத காவல் கட்டணமில்லா வன்முறை காட்சிகள் கொண்ட அதிரடி திரைப்படமாக அந்த கலவரத்தை கற்பனை செய்து கொண்டு தன்னை பார்வையாளனாக பாவித்து கொண்டது .

தானாக முன் வந்து கலவரத்தை கட்டுபடுத்த முற்பட்டோரில் ஒருவரான அந்த பிணத்தின் அப்பாவின் உச்சந்தலையை  ஒரு 'கறுப்பு'  கட்டை பதம் பார்த்ததில்  அவர் உயிர் நீத்தார். தன் பங்கிற்கு 'மஞ்சள்'   அவர் வீட்டை தீயிட்டது. 

அந்த சமயத்தில்  வரப்பில் இருத்ததால் மொத்த குடும்பத்தில் மிச்சபட்ட உயிராய் இருந்தது அந்த பிணம். 

கருமாதிகள் முடிந்து வேறு மாநிலம் சென்று பிழைப்பை நடத்தலாம் என்று யோசனையில் நடந்து கொண்டிருந்த பொழுதுதான் அந்த துர் சம்பவம் நிகழ்ந்தது .

தொலைக்காட்சி பெட்டி விற்பனை செய்யும் கடைவாசலில் இருந்த பெட்டியொன்றில்  ஓடிக்கொண்டிருந்த  

அந்த நாட்டின் 'அமைதி பூங்கா' என்ற பட்டம் பிணத்தின் மாநிலத்திற்கு வழங்கப்படும் விழாவான அந்த நிகழ்ச்சி. 

பார்த்த  நொடியில் பிணத்தின் புத்தி பேதலித்து விட்டது. தீவிர  மனபிறழ்வு நோயில் ஊர் ஊராய் சுற்றி திரிந்து 'அமைதி  பூங்கா'  எங்கேயும் இருக்கிறதா  என்று தேடி அலைந்தது.

ப்ச்.  அப்படி   ஒன்றும் இல்லை .

பிறகு  அதுவே ஒரு அமைதி  பூங்காவை கற்பனை செய்து கொண்டது . மஞ்சள் மற்றும் கறுப்பு பூக்கள் இல்லாத ஒரு அமைதி பூங்கா . 

 

அந்த   அமைதி  பூங்காவில் கை விரித்து  அங்கும் இங்கும் கானம் பாடி சிரித்து திரியும்  பொழுது ஊர் அதை தனக்கு தானே பேசி  சிரிக்கும் பைத்தியம் என்று நினைத்து கெnண்டது.

யார் மீதும் கல் எறியாயததால் அதை மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணம் யாருக்கும் வரவில்லை .

பசியின் உச்சத்தில் அந்த அமைதி பூங்காவில் இருந்து வெளியே வந்து இத்த உலகில் பிச்சை கேட்கும் .

இரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது கிடைத்து விடும் .

அன்று அதுவும் இல்லை என்று ஆன பொழுது அங்கே லுங்கி மடித்து நடந்து வந்த  அவனின் கையிலிருந்த அந்த பொட்டலத்தை பிடுங்கியது .

அவன் கையிலிருந்தது ஒரு பொக்கிஷம் என்று அதற்கு தெரிய வில்லை . அவன் அடிக்க இருக்கும் சரக்கு  சைடில் இருக்க வேண்டிய நொறுக்கு  தீனிகள்  அவை.

பொங்கி  வந்த கோபத்தில் பிணத்தின் விலாவை தன் முஷ்டியால் நொறுக்கிகினான். நுரையீரல் பொத்தல் விட்டு மூச்சிரைத்து கடைசியாக அந்த பிணம் ஒரு முறை இறந்தது. 

செத்த பிறகு கலவரத்தை தூண்டாத ஒரு  சாதியற்ற அநாதை பிணமான அதிர்ஷ்டத்தை நினைத்த பொழுது அந்த பிணம் மாயை அற்ற ஒரு நிஜ அமைதி பூங்காவினுல்  நுழைந்து கொண்டிருந்தது .